வானிலை சீற்றத்தினால் கடந்த இரு தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டயகம பிரதேசத்தில் நேற்று முதல் பெய்த கடும் மழை காரணமாக அப்பிரதேசத்தில் 475 எல் டயகம பிரிவு கிராம சேவகர் காரியாலயத்தில் வெள்ள நீர் உட்புகுந்து அங்குள்ள ஆவணங்கள் சேதமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை டயகம பகுதியில் வெள்ள நீர் பெருக்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் மட்டுமின்றி நகர்புற குடியிருப்புகளும், கடை தொகுதிகளும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை தலவாக்கலை பிரதான வீதியில் மன்றாசி நகரத்திற்கு அண்மித்த பகுதியில் மூங்கில் தோப்பு சரிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம் பெற்றது.
மன்றாசி நகரத்திலிருந்து வுட்லேண்ட் தோட்டத்திற்கு செல்லும் ஆகர ஆற்றை கடக்கும் பாலம் முற்றாக நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் இத்தோட்டத்திற்கு செல்லும் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
டயகம பிரதேசத்திலிருந்து வரும் ஆகர ஆறு பெருக்கம் எடுத்ததனால் டயகம, அக்கரப்பத்தனை, மன்றாசி, திஸ்பனை, ஆகரகந்தை, நாகசேனை, லிந்துலை போன்ற ஆற்றோர பிரதேசங்கள் நீரினால் மூழ்கியுள்ளது.
இதனால் இப்பிரதேசங்களில் விவசாய காணிகள் முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் ஆற்று நீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடதக்கது.