ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இந்த விவகாரத்தை தாம் எழுப்பியதாக, ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.
‘ஒக்டோபர் மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு, மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியது முக்கியமானது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் எடுத்துக் கூறியிருந்ததாகவும் மார்க் பீல்ட் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள அனைத்து தனியார் காணிகளையும் விடுவித்தல், காணாமல் போனோர் பணியகத்தை செயற்படுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக அந்த வாக்குறுதிகள் அமைந்துள்ளதாகவும் மார்க் பீல்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
34/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும், இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கும் பிரித்தானியா தொடர்ந்து உதவும்’ என்றும் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.