மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு சதிசெயலில் ஈடுபட்ட ஹபீஸ் சயீத் விடுதலைக்கு இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாகிஸ்தான் அரசு அவனை மீண்டும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது.
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஸ்கர்- இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவர் ஹபீஸ் சயீத். தற்போது இவன் ஜமர்தா உத்தவா என்ற அமைப்பை நடத்தி வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு சதிசெயலில் ஈடுபட்டான். தேடப்படும் குற்றவாளியக அறிவிக்கப்பட்ட இவனது தலைக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் பரிசு தொகையை அமெரிக்கா அறிவித்து உள்ளது.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. அதை தொடர்ந்து அவன் கைது செய்யப்பட்டு லாகூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டான்.
இதற்கிடையே அவனது வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யும்படி லாகூர் கோர்ட்டில் பஞ்சாப் மாகாண அரசு கோரிக்கை விடுத்தது.
ஆனால் ஹபீஸ் சயீத் மீது குற்றப் பின்னணி எதுவும் இல்லை என கூறி அவனை நீதிமன்றம் விடுதலை செய்தது.
மேலும் அதன்மீது தீவிரவாத புகார்கள் இல்லை. எனவே தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் புகார் மனு கொடுத்தான்.
இதற்கிடையே ஹபீஸ் சயீத் விடுதலைக்கு இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன.
அதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு அவனை மீண்டும் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் சயீத் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.