கேரள கடல் பகுதியில் இருந்து 28 விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 270 மீனவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. மீனவர்களை தேடும் பணியில் கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி அருகே கடலில் உருவான புயல் திருவனந்தபுரம் அருகே 60 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இதனால் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொச்சி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்த புயல் காரணமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் 4.2 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழும்பும் என்றும் கடலிலும் சூறாவளியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி கேரளாவில் கடலோர பகுதிகளில் இந்த புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
புயலை தொடர்ந்து கடலுக்கு சென்ற மீனவர்களை கரைக்கு திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் ஆழ்கடலுக்கு சென்றிருந்த மீனவர்கள் கரை திரும்ப தொடங்கினார்கள்.
கேரள கடல் பகுதியில் இருந்து 28 விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 270 மீனவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. இந்த தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழு, கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அந்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.