தமிழ்நாடு ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் டி.டி.வி. தினகரன் இன்று அ.தி.மு.க. கொடி போன்ற தோற்றம் கொண்ட கொடியுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் எதிர்வரும் 21-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளமயும் குறிப்பிடத்தக்கது.
இதில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது.
சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று முக்கிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யநேரம் கேட்டிருந்தனர். இதனால் தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று மதியம் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஸ் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்பு மனுவை அளித்தார். இதேபோல் டிடிவி தினகரனும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் கேட்டிருந்தார். அவர் 1 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி தனது ஆதரவாளர்களுடன் வந்த டிடிவி தினகரன், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்கினார்.
டிடிவி தினகரனுடன் வந்த அவரது ஆதரவாளர்களின் கையில் அ.தி.மு.க. கொடி போன்ற தோற்றத்தில் புதிய கொடியை ஏந்தி இருந்தனர். அந்த புதிய கொடியில் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் இடம் பெற்று இருந்தன. அண்ணா படம் இடம்பெறாமல் அ.தி.மு.க. கொடி போன்றே அந்த புதிய கொடி இருந்தது.
முன்னதாக டிடிவி தினகரன் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ”எதிரிகளையும், துரோகிகளையும் வென்று இரட்டை இலையை மீட்டெடுப்போம்” என்றார்.