உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்சா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 16 பெருநகரங்கள், 198 நகரசபைகள், 438 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல்கள் நடைபெற்றன.
அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அயோத்தி, மதுரா-பிருந்தாவனம், மொராதாபாத், கான்பூர், பிரோஸாபாத், வாரணாசி, கோரக்பூர், லக்னோ, சஹரான்பூர், ஜான்சி, அலகாபாத், ஆக்ரா, காசியாபாத், பரேலி ஆகிய 14 பெருநகரங்களின் மேயர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், உ.பி.யின் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றியை குஜராத் சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் கிர் சோமநாத் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உ.பி.யில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கொங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான வழிகாட்டுதல் மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சிறப்பான ஆட்சியால் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
குஜராத்தில் காங்கிரஸ் வரும் என்ற கோசங்களை அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக எழுப்பி வந்தனர். ஆனால், உத்தரப்பிரதேசம் மாநில மக்கள், காங்கிரசே சென்று வா எனக் கூறிவிட்டனர்.
உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றியை குஜராத் தேர்தலுடன் ஒப்பிடக்கூடாது. ஏனெனில், அங்கு பா.ஜ.க. குறைந்தது 150 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மையாக வெற்றி பெறும்,
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அமேதி தொகுதியில் கலெக்டர் அலுவலகம் செயல்படவில்லை. ஆனால், ராகுல் எங்களுக்கு வளர்ச்சி குறித்து பாடம் நடத்த வந்துவிட்டார் என குற்றம் சாட்டினார்.