முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான ஒதியமலை கிராமதிதில் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் 33ஆவது நினைவேந்தல் இன்று நடைபெற்றது.
1984ஆம் ஆண்டு இதே போன்றதொரு நாளில் அதிகாலை வேளையில் இராணுவம் சந்திப்புக்கென அழைக்கப்பட்ட 33 அப்பாவி மக்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களை நினைவுகூருவதற்கான நிகழ்வு ஒதியமலை படுகொலை நடைபெற்ற இடத்தில் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி பொதுமக்களுக்கு உறவுகளால் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மா சாந்தி பிரார்த்தனைகளும் அன்னதானமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடமாகாண சபை பிரதி அவை தலைவர் கமலேஸ்வரன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சரும் தற்போது மாகாண சபை உறுப்பினருமான சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.