யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மைகருதி பண்ணைக் கடற்கரைப் பகுதியில் பெரியளவிலான அரச பொது ஓய்வு விடுதியொன்று 36 கோடி ரூபா செலவில் அமைக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜி.கே. குணதிலக தெரிவித்தார்.
இந்த விடுதி யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் பண்ணை கடற்கரைப் பகுதியை அண்டி யாழ்.சிறைச்சாலைக்கு அண்மையாக அமைக்கப்படுகிறது.
40 அறைகளை கொண்ட சகல நவீன வசதிகளுடன் மக்கள் பயன்படுத்தும் விதமாக இந்த விடுதி அமைக்கப்படுகிறது.
தற்போது முதற்கட்ட கட்டுமானங்கள் கடற்கரை பகுதியில் மண் நிரப்பப்பட்டு 60 மில்லியன் ரூபாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இந்த ஓய்வு விடுதியின் கட்டுமானங்கள் 300 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டு அழகிய இரண்டுமாடிக் கட்டடத்துடன் அமையவுள்ளது.
பண்ணை சுற்றுலாக் கடற்கரையை அண்டி அமையவுள்ள இந்த ஓய்வு விடுதியால் மிகுந்த பயனை சுற்றுலா வாசிகள் பெறுவர்.
அத்துடன் யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கும் இந்த விடுதி பங்களிப்பை செய்யுமென எதிர்பார்க்கின்றோம்.
ஏற்கனவே மண்கும்பான் பகுதியில் அரச பொது ஓய்வு விடுதி அமைக்கப்பட்டு செயற்பட்டுவரும் நிலையில் மக்களுக்கான அரச பொது விடுதி யாழ்ப்பாண நகரிலும் அமைக்கப்படுகின்றது – என்றார்.