உள்ளூராட்சிசபைத் தேர்தல் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இல்லை என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் கட்சியின் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த தேர்தலானது கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை இலக்காகக் கொண்டதெனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘உள்ளூராட்சிசபைத் தேர்தல் வெற்றியின் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையினை மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் எனக் காட்டுவதற்கு தமிழரசுக் கட்சி ஆர்வம் காட்டு தாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆனால் வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கை என்பது மிக பிழையான ஒன்றெனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு பிழையான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு பொதுவான ஒரு எதிரணி தேவை என்பது உணரப்பட்டிருக்கின்றது என தெரிவித்த சுரேஸ் பிறேமச்சந்திரன்
அந்தவகையில் தேசிய கொள்கைகளை ஒத்துக் கொண்டு கிராமிய அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ச்சியாகப் பேச்சு நடத்தப்பட்டு பலமான பொது எதிரணி ஒன்றை உருவாக்க நினைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டணியில்; சமூகத்தில் உள்ள பல அமைப்புக்களையும் இணைத்து செயற்பட தீர்மானித்திருந்ததாக தெரிவித்த சுரேஸ் பிறேமச்சந்திரன் அந்தவகையில் பலராலும் ஆதரிக்கப்பட்ட தந்தை செல்வாவாலும் ஆதரிக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே என குறிப்பிட்ட சுரேஸ் பிறேமச்சந்திரன் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானித்திருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரித்துள்ளதுடன் அதற்காக பல்வேறு காரணங்களையும் கூறியுள்ளதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே தமக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அதேபோல் தாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளதென குறிப்பிட்டுள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன் எனவே என்ன வகையில் தொடர்ந்து இணைந்து செயற்படலாம் என தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தபோவதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.