தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பலமான அணியாக களமிறங்குமென தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிகட்சிகளுடனான சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மிகவும் ஆராயப்பட்டதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 80 சதவீதமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவை சேனாதிராஜா நடைபெறவுள்ள தேர்தலில் 3 கட்சிகளிற்குள்ளும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஒன்றுபட்டு திரட்டுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்னும் ஓரிரு விடயங்கள் ஆராயப்பட வேண்டியிருப்பதனால், அந்த விடயங்களையும் தீர்மானித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிப்பதாகவும் மாவை சேனாதிராஜா இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் பூரணப்படுத்தப்பட வேண்டியிருப்பதனால், மூன்று கட்சி சார்ந்த உறுப்பினர்களும், உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.