2020ம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் நேற்றைய தினம் பிரசுரமான ‘மௌபிம’ எனும் சிங்கள பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டில் இலங்கையின் ஜனாதிபதி யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு செய்தி பொய்யானது என கொழும்பு பல்கலைக்கழக ஊடகவியல் பீடத்தின் இணைப்பாளர் பேராசிரியர் சமந்த ஹேரத் அறிவித்துள்ளார்.
2020ம் ஆண்டில் யார் ஜனாதிபதியாக தெரிவாக வேண்டும், தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து கொழும்பு பல்கலைக்கழக ஊடகவியல் பீடம் எவ்வித கருத்துக் கணிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை.
உத்தியோகபூர்வமாக இவ்வாறான எந்தவொரு கருத்துக் கணிப்பும் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பு என்ற அடிப்படையில் செய்தி வெளியிடுவதன் மூலம் வாசகர்களை பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு தனிப்பட்ட நபரும் கருத்துக் கணிப்புக்களை நடாத்தி அதனை பிரசுரிக்க அனுமதியுண்டு என்ற போதிலும் அதற்காக பல்கலைக்கழகத்தின் பெயரை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.
‘மௌபிம’ வெளியிட்ட செய்தியின் சாரம்சம் வருமாறு, 2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படப்போவது யார்? என்று தற்போதும் நாட்டில் பிரபல்யமாக உள்ள ஐந்து பேரின் பெயர்களை முன்னிலைப்படுத்தி கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
கருத்துக்கணிப்பின் முடிவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவார் என்று அதிகமானவர்கள் கூறியுள்ளனர், என இருந்தமை குறிப்பிடத்தக்கது.