கனடாவில் வசித்து வந்த இலங்கை தமிழ்க் குடும்பம் ஒன்று, நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளது.
கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நேற்றுமாலை Montreal’s பகுதியில் உள்ள Trudeau விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கை மிகவும் வருத்தமாக உள்ள போதிலும் நாம் இன்னமும் கனடாவை நேசிப்பதாக நாடு கடத்தப்பட்ட குடும்பத்தின் தலைவர் ரொபர்ட் லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கனேடிய சட்டங்களுக்கு நாம் கட்டுப்படுகிறோம். எனினும் கடந்த 5 வருடங்களாக கனடாவில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழந்தோம் என லோரன்ஸ் கனேடிய ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்த போதிலும், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்தே, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
போரின் போது கிழக்கு மாகாணத்தில் ஐ.நா அமைப்புக்காக பணியாற்றிய லோரன்ஸ், 2012ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் கனடாவில் தஞ்சமடைந்திருந்தார்.
எனினும், கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை மறுக்கப்பட்டதை அடுத்தே, இவரது குடும்பத்தினர் நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தும் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கனடிய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Ralph Goodale இதனை மீள்திருத்தம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.