அரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கொழும்பு துறைமுகத்தினுள் 3000 தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்காக நேர்முகப் பரீட்சைகளை நடத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம்சுமத்தியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாமல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றிய 438 பேரை பணிநீக்கம் செய்வதற்கு துறைமுக அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டில் தொழிலாளர் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள போதும் அவரின் உத்தரவை மீறி துறைமுக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக நாமல் தெரிவித்தார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தொழில்வாய்ப்பை வழங்குவதாக கூறி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளது மாத்திரமன்றி தொழில் சட்டத்தையும் மீறியுள்ளதாக நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் இன்றளவில் பொதுமக்களுக்கு பலவிடங்களை காட்டி அச்சுறுத்தலை மேற்கொண்டேனும் தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிப்பதாக நாமல் குற்றம்சுமத்தினார்.
எவ்வாறாயினும், ஹம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்களின் தொழில் இழப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே பொறுப்பு கூற வேண்டும் என சுயாதீன துறைமுக சங்கத்தின் தலைவர் லால் பங்கமுவவே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.