கிளிநொச்சி- மகாதேவா சிறுவர் இல்லத்தில் என்ன நடப்பது என மாகாண சிறுவர் நன்னடத்தை அமைச்சு மற்றும் மாகாண சமூகசேவைகள் அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்களும் இணைந்து விசாரணை நடத்தி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடாக சபைக்கு அறிக்கை சமர்பிக்கும்படி அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் 111வது அமர்வு இன்று நடைபெற்றது.
இதன்போது மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம் மகாதேவா சிறுவர் இல்லம் தொடர்பான பிரேரணை ஒன்றை சபைக்கு கொண்டுவந்தார்.
குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் இறுதியிலேயே அவை தலைவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன் குறித்த சிறுவர் இல்லத்தில் 366 சிறுவர்கள் தங்கியிருக்கும் நிலையில் தற்போது சிறுவர் இல்லத்தை தலமைதாங்கி வருபவர் இந்த மாதம் 14ம் திகதி வரை மாத்திரமே சிறுவர்களுக்கு உணவு கொடுக்க கூடிய நிலை இருப்பதாக தெரிவித்துள்ளதாக மாகாணசபை உறுப்பினர் ப.அரியரட்ணம் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து உரையாற்றிய அவைத்தலைவர் மாகாண உள்ளக கணக்காய்வு பகுதியினரையும், மாகாண சிறுவர் நன்னடத்தை அமைச்சு மற்றும் மாகாண சமூக சேவைகள் அமைச்சு ஆகியவற்றையும் இணைத்து குழு ஒன்றை உருவாக்கி அங்கு என்ன நடக்கிறது என்பதை விசாரணை நடத்தி அறிக்கையை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடாக சபைக்கு சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.