தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவதற்கு ரெலோ அமைப்பு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினரும், ரெலோ அமைப்பின் செயற்பாட்டாளருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியுடனான சந்திப்பில், ஆசன பங்கீடுகள் தொடர்பில் பங்காளி கட்சிகள் கோரும் குறைந்தளவான ஒதுக்கீடுகளுக்கு தமிழரசு கட்சி உறுதியான பதில் தரவில்லை எனவும் விந்தன் கனகரட்ணம் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 03 ஆம் திகதி மற்றும் நேற்றய தினமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, அதிகமான ஆசன ஒதுக்கீடுகள் ரெலோவிற்கு தருவதாக இருந்த நிலையில் கிழக்கில் 3 சபைகளை கோருவதாக ரெலோ தீர்மானித்திருந்ததாகவும் விந்தன் கனகரட்ணம குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் 3 ஆசனங்கள் கொடுக்க முடியாது, இரண்டு ஆசனங்களே தர முடியுமென தெரிவித்ததாகவும் விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 70 வீதம் தமிழரசு கட்சிக்கும் 30 வீதம் ஏனைய கட்சிகளுக்கும் என தெரிவித்தனர். காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் மிக விரைவாக முடிவுகள் எட்டப்பட வேண்டும்.
ஆனால், அர்ப்பணிப்புடனும், விட்டுக்கொடுப்புடன் இருந்த சூழ்நிலையில், எடுத்த தீர்மானத்திற்கு தமிழரசு கட்சி விடாப்பிடியாகவும், எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்த நிலையிலும், தமிழரசு கட்சி மீது சந்தேகமும், அதிருப்தியும் கொண்ட தமிழர் விடுதலை இயக்கம் நேற்று வவுனியாவில் கலந்துரையாடிய போது, தமிழர் விடுதலை இயக்கம் தமிழரசு கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று தீர்மானித்துள்ளது.
அத்துடன், தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறுவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று மாலை தலைமைக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் தமிழர் விடுதலை இயக்கத்தின் அடுத்த செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றார்.