காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய தாம் எதிர்வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போவதாக காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
292 ஆவது நாளாக இன்று கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்து போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த கனகரஞ்சினி மற்றும் லீலாதேவி ஆகியோரே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தங்களின் ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தை முகவுரையாக எழுதி வாக்குகளை பெற்று தங்களின் சுயநல அரசியலை நடத்துகின்றார்களே தவிர காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. எனவே வருகின்ற தேர்தலிலும் தங்களுடைய விடயத்தை முன்வைத்து வாக்கு கேட்டு வருகின்றவர்களுக்கு தாங்கள் தக்க பாடம் புகட்டவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இந்த உள்ளூராட்சி தேர்தலில் தாம் எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை எனவும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ள கூடாது. அதனை மக்கள்தான் கூற வேண்டும். மக்களின் பிரச்சினைகளில் அக்கறையில்லாதவர்கள் ஏக பிரதிநிதிகள் அல்ல எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எதிர்வரும் பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் யாழ்ப்பாணத்தில் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தி ஜ.நா அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் வழங்கவுள்ள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.