கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2018ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி, தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்துமத விவகார அமைச்சுகளின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்,
இரணைதீவு காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தீர்கள். இதுவரை விடுவிக்கப்படவில்லை.
உங்களது கருத்துகளை நம்பமுடியாதுள்ளது என்று அமைச்சர் சுவாமிநாதனைப் பார்த்து கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன்
கேப்பாப்பிலவிலுள்ள மக்களின் காணிகள் அனைத்தும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும்.
இரணைதீவு காணிகள் குறித்து அரசுடனும், பாதுகாப்புத் தரப்புடனும் பேசித்தான் தெரிவிக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.