கிளிநொச்சி – கனகபுரம் துயிலுமில்லத்தை தாவரவியல் பூங்காவாக மாற்ற வேண்டாம் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படையினர் வசமிருந்த கிளிநொச்சி – கனகபுரம் துயிலுமில்லம் 2016 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது.
அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில், சிவஞானம் சிறிதரனால் தெரிவு செய்யப்பட்ட திட்டங்களில் ‘கனகபுரம் உயிரியல் பூங்கா மீள் நிர்மாணம்’ எனும் திட்டமும் உள்வாங்கப்பட்டிருந்தது.
இதற்காக அந்த நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை ஒதுக்குவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்று, கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பிரதமரின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலும் அதே பெயரில் இந்தத் திட்டம் உள்வாங்கப்பட்டிருந்தது.
பிரதமரின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டத்திற்காக 15 இலட்சம் ரூபாவை செலவிடத் தீர்மானிக்கப்பட்டது.
‘கனகபுரம் உயிரியல் பூங்கா மீள் நிர்மாணம்’ எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கரைச்சி பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கனகபுரம் துயிலுமில்லத்தைச் சுற்றி மதில் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும், சில தினங்களுக்கு முன்னர் நிர்மாணப்பபணிகள் கைவிடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன், கனகபுரம் உயிரியல் பூங்கா என கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு பெயர்ப்பலகை பொருத்தப்பட்டதுடன், அன்று மாலையே அந்தப் பெயர் பலகையை சிலர் உடைத்துவிட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லங்கள் அமைந்துள்ள பகுதிகளை புனித பூமிகளாகப் பெயரிட வேண்டுமென கடந்த வருடம் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.