யாழில் உருவான முழு நீள திரைப்படமான பனைமரக்காடு திரைப்படம் கொழும்பில் திரையிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது.
வறுமை ஆராய்ச்சி நிலையத்தினரானால் இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தரங்கிணி திரையரங்கில் கடந்த 05ஆம் திகதி பனைமரக்காடு திரைப்படம் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததுடன் குறித்த திரைப்படத்தின் இயக்குனர் கேசவராஜன் நவரட்ணம் எழுத்தாளர் வெற்றி செல்வி மற்றும் திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம ஆகியோருடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அந்நிலையில் திரைப்படம் திரையிடுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் செவ்வேல் என்பவர் தானே பனைமரக்காடு திரைப்பட தயாரிப்பாளர் எனவும் , தனது அனுமதி இன்றி திரைப்படத்தினை வெளியிட்டால் சட்ட நடவடிக்கைக்கு செல்வேன் என இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து திரைப்பட கூட்டு தாபன பணிப்பாளர் , வறுமை ஆராய்ச்சி நிலையத்தினருக்கு அது தொடர்பில் அறிவித்துள்ளனர். அதன் பின்னர் இயக்குனருக்கும் தயாரிப்பாளர் என கூறும் செவ்வேல் என்பவருக்கும் இடையில் சமரச முயற்சிகளை மேற்கொண்டு திரைப்படத்தினை குறித்த திகதியில் திரையிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அதற்கு தயாரிப்பாளர் என கூறும் செவ்வேல் என்பவர் ஒவ்வொரு நிபந்தனையாக முன் வைத்து இறுதி நேரத்தில் நிகழ்ச்சி நிரலில் மாற்றங்களை செய்யுமாறும் நிபந்தனைகளை முன் வைத்து அவற்றையும் மாற்றி அமைத்த பின்னர் இறுதி நேரத்தில் 5ஆம் திகதி காலை (மாலை திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு விட்டது) கொழும்பு வர முடியாது எனவே குறித்த திகதியில் திரையிட கூடாது என அறிவித்துள்ளார்.
அதனால் குறித்த திரைப்படம் அன்றைய திகதி திரையிடபாடமல் நிறுத்தப்பட்டது. குறித்த திரைப்படத்தினை பார்க்க என இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பலரும் கொழும்புக்கு சென்று இருந்த நிலையில் இறுதி நேரத்தில் திரைப்படம் திரையிடப்படாமல் தடுக்கப்பட்டமை பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இதேவேளை குறித்த திரைப்படத்தின் இயக்குனர் சார்பில் , ‘பனைமரக்காடு முன்னர் செவ்வேல் தயாரிக்க முன் வந்து 3 இலட்சத்து 40ஆயிரம் ரூபாய் பணம் மட்டுமே தமக்கு வழங்கப்பட்டதாகவும், பின்னர் திரைப்படத்தினை தொடர்ந்து தயாரிக்க செவ்வேல் விரும்பாத காரணத்தால் அதனை கைவிட்டு விட்டார் எனவும்
அதன் பின்னர் திரைப்படத்தினை திரைக்கதையில் பல மாற்றங்களுடன் புதிதாக இயக்குனரே தயாரித்து முடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தயாரிப்பாளர் தரப்பில் குறித்த திரைப்படத்திற்காக தாம் பத்து மில்லியன் ரூபாய் செலவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை கடந்த செப்டெம்பர் மாதம் யாழில் நடைபெற சர்வதேச திரைப்பட விழாவில் யாழில் உள்ள திரையரங்கில் பனைமரக்காடு திரையிடப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.