வடக்கு கிழக்கு பகுதிகளில் இரவோடு இரவாக புத்தபெருமானின் சிலைகள் கொண்டுவந்து வைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பௌத்த சாசன அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே டக்ளஸ் தேவானந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்த குறித்த செயல்கள் தொடர்பில் விமர்சனங்கள் எழுகின்றபோது இந்த பௌத்த நாட்டில் வடக்கு – கிழக்கில் பௌத்த விஹாரைகள் அமைப்பதற்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் தடையாக உள்ளதாக அதே இனவாத சக்திகள் பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இவ்வாறான விடையங்கள் தவறானது என தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துவதற்காகவே சில இனவாதிகள் புத்த பெருமானின் சிலைகளை வடக்கு கிழக்கில் உருவாக்குவதாகவும் விபரித்துள்ளார்.
அத்துடன் ஒரு மதத்தை மலினமாக்கக் கூடாது என குறிப்பிட்ட டக்ளஸ் தேவானந்தா ஒரு மதத்தின்மீது ஏனைய மதத்தினருக்கும் மதிப்பு ஏற்படுகின்ற வகையிலான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, பௌத்த சாசன அமைச்சுக்கு மேலதிகமாக, ஏனைய அமைச்சுக்களின் ஊடாகவும் பௌத்த மதத்துக்கு நிதி ஒதுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது