மாவீரர்களின் பெற்றோர்களிடமும், முன்னாள் போராளிகளிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயக அரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது என தெரிவித்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின் மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆயுதமேந்தி போராடினோம் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் உயிரையும், உதிரத்தையும் கொடுத்து தமிழ்த் தேசியத்தை உருவாக்கி அதன் காவலர்களாக, கவசங்களாக காத்து நின்றவர்கள் போராளிகள் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
போராளிகள் உருவாக்கிய தேசியத்தில் பதவிகள் தருகின்ற இதமான சூடுகளை அனுபவித்து ஆள்கின்றவர்கள் விடுதலைக் கனவுடன் ஆயுதமேந்தியோரை மலினப்படுத்தும் விதமாக ஆயுததாரிகள் என விளித்து நிற்பது அறத்திற்கு அப்பாற்பட்டதெனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் சுமந்திரன்; அடிக்கின்ற அரசியல் அலப்பறைகள் தமக்கும் மக்களுக்கும் புதியவையல்ல எனவும் அவற்றினை தாம் கசப்புணர்வோடே அவதானிப்பதாகவும் குறிப்பிடடுள்ளார்.
விரைந்து மாறுகின்ற அரசியல் களம் நிலைத்து நீட்சி பெறுவதற்கு இது போன்ற சொல்லாடல்கள் என்றுமே பலம் சேர்க்கப் போவதில்லை என குறிக்கிட்டுள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் யாராகினும் நா காக்க வேண்டும் என்றும் தெரிவிவித்துள்ளார்.
இவ்வாறான சொல்லாடல்களை பயன்படுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான சுமந்திரன் இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், மற்றும் போராளிகளிடமும் பகிரங்க பொது மன்னிப்புக் கோர வேண்டுமென்பதே தமது நிலைப்பாடாகும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.