கேரளாவில் ஒக்கி புயலால் பலியான மீனவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் கேரளாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
கேரளாவின் விழிஞ்ஞம், கொல்லம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மாயமானார்கள். அவர்களை கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தேடினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்பட்டனர். சிலரது உடல்கள் பிணமாக கரை ஒதுங்கியது. இதுவரை 39 மீனவர்கள் பலியாகி உள்ளனர்.
இறந்து போன மீனவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என்றும் கூறி உள்ளது.
இதற்கிடையே மீனவர்களுக்கு அளிக்கப்படும் நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று முதல்- மந்திரி பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் நிர்வாகியுமான ரமேஷ் சென்னிதலா, முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி பலியான மீனவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும்.
கடலில் இயற்கை சீற்றத்தால் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை செயற்கைகோள் துணையுடன் கண்டுபிடிக்க வேண்டும்.
இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் துணையுடன் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் கேரளாவில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு கேரள மாநில அரசு அறிக்கை தயாரித்துள்ளது.
இதனை இன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வழங்குகிறார். மத்திய அரசு இழப்பீடு வழங்கியதும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென்று மாநில அரசு தெரிவித்துள்ளது.