நிதி மோசடியை ஒழிப்பதற்காகவே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பிரிவின் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இதுவரை 13 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக 93 பிரச்சினைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் சிக்கல் வாய்ந்தவையாகும் எனவும் சில கொடுக்கல் வாங்கல்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து ஆராய்வதற்காக குறித்த நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
உள்நாட்டு விசாரணைக் குழுக்களுக்கு விசேட அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் விசாரணை நடவடிக்கைகளுக்கு மனித வளங்களும் குறைவாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் காணப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.