இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுக்களால் வெற்றிவாகை சூடியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
இதன்படி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில், இலங்கை அணி நாணயசுழற்சியில் வென்று களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, இந்தியா சார்பில் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால், இலங்கையின் பந்து வீச்சில் அனல் பறந்தது. முதல் இரண்டு ஓவர்களில் இந்தியா ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை என்பதோடு, 2-வது ஓவரின் கடைசி பந்தில் தவான் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். 3-வது ஓவரில் இந்திய அணி ஒருவாறு ஒன்றை ஓட்டத்தை எடுத்தது.
பின்னர் 4-வது ஓவரில் ஓட்டம் எதுவும் பெறாத இந்திய அணி, 5வது ஓவரின் முதல் பந்திலேயே அணித் தலைவர் ரோகித் சர்மாவின் விக்கெட்டையும் பறிகொடுத்தது.
3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் கைகோர்த்த, தினேஷ் கார்த்திக், 9-வது ஓவரின் 5-வது எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 8 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது.
4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் மணீஸ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 11 ஓட்டங்களை மட்டுமே எடுத்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது.
இந்தநிலையில், 13-வது ஓவரின் 5-வது பந்தில் மணீஸ் பாண்டே ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை எடுத்திருந்தது.
5-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் தோனி ஜோடி சேர்ந்தார். 14-வது ஓவரின் 2-வது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் இந்தியா 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.
6-வது விக்கெட்டுக்கு தோனியுடன் இணைந்தார் ஹர்திக் பாண்டியா.
இந்த ஜோடி சற்று நிதானமாக ஆடியது இந்திய இரசிகர்களை ஆறுதல்படுத்தியது.
எனினும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை, 16-வது ஓவரின் 2-வது பந்தில் ஹர்திக் பாண்டியா வெளியேற்றப்பட்டார்.
அப்போது இந்தியா 28 ஓட்டங்களையே பெற்றிருந்தது.
7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜோடி சேர்ந்த, புவனேஸ்வர் குமார் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 29 ஓட்டங்களையே பெற்றிருந்தது.
எனினும் மறுபுறம் நிதானமாக ஆடிய, இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி, மோசமான நிலையில் இருந்து அணியை மீட்கப் போராடி வந்தார்.
அதன்பின்னர் தோனியுடன் கரம் கோர்த்த இறுதி வரிசை வீரர்களான பும்ரா மற்றும் சாஹல் ஓட்டங்கள் எதுவும் பெறாவிடினும், தோனிக்கு ஆட வாய்ப்பளித்து சற்று நேரம் iமானத்தில் நிலைத்து நின்றனர்.
எனவே, அரைச்சதம் கடந்து 65 ஓட்டங்களை விளாசிய தோனியும் ஆட்டமிழக்க, 112 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இந்திய அணி இழந்தது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் 4 விக்கெட்டுக்களையும், நுவன் பிரதீப் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
இதனையடுத்து 113 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலக, உபுல் தரங்க ஆகியோர் களமிறங்கினர்.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 7 ஆக இருந்த போது, குணதிலக ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த திரிமானே ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய மெத்யூஸ் நிதானமாக விளையாடினார். சிறப்பாக விளையாடிய உபுல் தரங்க 49 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 65.
அதன்பின், களமிறங்கிய டிக்வெல்ல, மெத்யூசுடன் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இலங்கை அணி 20.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ஒட்டங்களை விளாசி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.