எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக பாடுபடாத சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் யாப்புக்கு அமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தவோ, பலவீனப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.
அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வலுப்படுத்துவதற்காகவே, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் போது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
இரண்டரை வருடங்கள் காத்திருந்ததாகவும் தொடர்ந்தும் கட்சியை அலட்சியப்படுத்துவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது பயனற்றது. இதனால், கட்சியை நேசிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி, மத்திய செயற்குழு உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.