டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக புதிய வகை பக்டீரியா பயன்படுத்துவது தொடர்பில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அவதானம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மொனாஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வொல்பேச்சியா’ என்ற பக்டீரியாவை பயன்படுத்துவது குறித்தே இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள உள்ளதாக அமைச்சர் கூறினார்.
டெங்கு வைரசின் பரவலை தடுப்பதற்காக குறித்த பக்டீரியா தற்போது அவுஸ்திரேலியா, வியட்நாம், இந்தோனேசியா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அந்தத் திட்டத்திற்கு இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களின் களநிலமைகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குவதற்கு மொனாஸ் பல்கலைக்கழகம் இணங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 01 இலட்சத்து 77,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.