அணு ஆயுதங்கள் குறைப்பு தொடர்பாக முன்நிபந்தனைகள் எதுவும் இன்றி வடகொரியாவுடன் அமெரிக்கா பேச தயாராக உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் டில்லர்சன் தெரிவித்தார்.
உலக நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பொருளாதார தடைகளை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றமயும் குறிப்பிடத்தக்கது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
வடகொரியாவை அமெரிக்கா கண்டித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்த நிலையில் அமெரிக்கா பின்னர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது.
அதேசமயம் அணு ஆயுதக் குறைப்பு தொடர்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது என்றும், அணு ஆயுதங்களை அகற்றுவதற்கு வடகொரியா அரசு தயாராக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியிருந்தார்.
இந்த மோதல் போக்கு ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனைகளை கடந்த நவம்பர் மாதம் வடகொரியா பரிசோதனை செய்தது.
இந்நிலையில், அணு ஆயுத குறைப்பு தொடர்பாக வடகொரியாவுடன் முன்நிபந்தனைகள் இன்றி பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுக் கொள்கை சவால்கள் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே ரெக்ஸ் டில்லர்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.