வவுனியா மாவட்டதில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை தாம் நிராகரிப்பதாக காணாமர் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வவுனியா பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்ட குறித்த உறவினர்கள் பிரதேச செயலாளருக்கும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
அண்மையில் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது உறுதி அளிக்கப்பட்டதற்கு அமைவாக எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே வவுனியா மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை தாங்கள் நிராகரிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விடயம் பல வருடங்கள் தாமதமாகிக் கொண்டிருப்பதனால் மீள பதிவதற்கான நடவடிக்கையினை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் ஏமாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகவே குறித்த மீள் பதியும் நடவடிக்கையினை முன்னெடுத்திருப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரனவிடமும் வவுனியா பிரதேச செயலகத்திற்கு சென்று வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசாவிடமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மகஜர் கையளித்தனர்.