நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகள் தொடர்பான தேசிய ரீதியிலான தனிநபர் பெயர்ப்பட்டியலொன்று தயாரிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக ஆட்பதிவுத்திணைக்கள நாயகம் லியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக அனைத்து பிரஜைகளினதும் கைவிரல் அடையாளம் அடங்கலாக குடும்பத்தினரின் தகவல்கள் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் கிராமசேவகர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பிரதேச செயலகங்களில் துணை ஆட்பதிவுத்திணைக்கள அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த அலுவலகங்களில் உள்ளோர் வீடுகளுக்குச் சென்று கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இதனை தயாரிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்கள நாயகம் லியானி குணதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.