எந்த வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென உயிரைப் பறிக்கும் நோய் மாரடைப்பு. பயணம், உறக்கம், என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வயது வித்தியாசமின்றி மாரடைப்பு மனித உயிர்களைப் பறித்துவருவதை நம்மால் காண முடிகிறது. இதற்கு மருத்துவர்களும் விதிவிலக்கல்ல.
தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவமனையான, சேலம் விநாயகா மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ காட்சி பார்ப்பவர் மனதை பதற வைக்கும் வகையில் உள்ளது.
நவம்பர் 26ஆம் தேதி பதிவான அந்த வீடியோவில் பெண் மருத்துவர் ஒருவர் பணியில் இருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் ஓடிவந்து அவரைத் தூக்குவது போல் பதிவாகியுள்ளது.
குறிப்பிட்ட அந்த மருத்துவரின் பெயர் சுனிதா. அவர் இதயவியல் மருத்துவர். அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் .
சமீபத்தில், எய்ம்ஸ் மருத்துவர் சந்தீப் மிஸ்ரா வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் 33 நொடிக்கு ஒருவர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 20 லட்சம் பேர் மாரடைப்பால் மரணமடைகின்றனர்.