பல்வேறு துயரங்களையும், துன்பங்களையும் கடந்து வந்ததுடன் அதற்காக இழந்தவையும் அதிகம்.
இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே ஜனநாயக ரீதியாக தமது உரிமைக்காக தமிழ் தேசிய இனம் குரல் கொடுத்து வந்த நிலையில் அந்த தலைமைகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளும், கூட்டுக்களும், கூட்டுக்களின் நிலையற்ற தன்மையும் தென்னிலங்கையின் அரசியல் தலைமைகளுக்கு வாய்ப்பாக அமைந்திருந்தன.
மிதவாத தலைமைகளின் கோரிக்கைகளை தென்னிலங்கை சிங்கள பௌத்த மேலாதிக்கவாத தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் இளைஞர், யுவதிகள் விரும்பியோ, விரும்பாமலோ ஆயுதம் ஏந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாக போராடிய தமிழ் தேசிய இனம் தனிநாடு கேட்டு போராடத் தொடங்கியது. பல போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன.
தனிநாடு, தனித் தமிழீழம் என அவை ஆயுதங்களை கையில் எடுத்தன. அப்போது இருந்த மிதவாத தலைமைகளும் இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்த காரணமாகினர்.
ஒவ்வொரு ஆயுதப் போராட்ட அமைப்புக்களும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரலின் பின்னால் இழுபட்டு சென்று இறுதியில் சகோதர மோதலுக்குள் வந்து நின்றன.
அந்த ஆயுதப் போராட்ட அமைப்புக்களை இந்தியா சரியான முறையில் கையாண்டிருந்ததுடன், அவற்றின் ஒற்றுமைக்கும் தடையாக இருந்ததை மறுப்பதற்கில்லை.
இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே இறுதி வரை இலட்சியத்திற்காக போராடி தமிழ் மக்களின் அதீத ஆதரவைப் பெற்ற இயக்கமாக இருந்தது. ஏனைய அமைப்புக்களுக்கான ஆதரவு என்பது விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவானதாகவே இருந்தது.
ஒரு நாட்டிற்குரிய கட்டமைப்புக்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் சிறப்பாக செயற்பட்டு இருந்த நிலையில், கடந்த மஹிந்த அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் மௌனிக்கச் செய்தது.
தரைப்படை, விமானப்படை, கடற்படை என வலுவான இராணுவ கட்டமைப்புடன் இருந்த விடுதலைப்புலிகளின் எழுச்சியானது பூகோள அரசியலில் தாக்கம் செலுத்திய நிலையில் பூகோள அரசியல் நகர்வை மையப்படுத்தி அந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியிருந்தன.
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்களது தலைமையாக அல்லது தமிழ் மக்களின் தீர்வு விடயங்களை கையாளும் தரப்பாக அவர்களே இருந்தனர்.
ஆனால் 2009 இற்கு பின்னர் அதனை கையாள வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பின் தலையில் விழுந்துள்ளது. ஆனால் யுத்தம் முடிவடைந்து கடந்த எட்டரை ஆண்டுகளில் தமிழ் மக்களின் அரசியல் எவ்வாறு நகர்ந்திருக்கின்றது.
தமிழ் மக்களது அபிலாசைகள் நிறைவேறக் கூடிய சூழல் இருக்கின்றதா என்பது குறித்து தமிழ் மக்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொடுத்த விலைகளும், அவர்கள் பட்ட துன்பங்களும், அவர்களது இழப்புக்களுமே இலங்கை அரசாங்கத்திற்கு மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக ஐ.நா மனித உரிமை பேரவையில் வந்திருந்தது.
அது தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அடைவதற்காகவும், நிரந்தர தீர்வுக்காகவும் கொடுத்த விலைகள். அதனை மூலதனமாகக் கொண்டு அடுத்த கட்ட அரசியலை நகர்த்தி தீர்வைப் பெறவேண்டும்.
அதுவே அந்த இழப்புக்களுக்கான ஒரு நிவாரணமாக இருக்கும். ஆனால் தமிழ்த் தலைமை அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதனை சரியாக கையாண்டிருக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானமும், அழுத்தமும் 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் மேற்குலகின் ஆதரவுடன் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் நெகிழ்வுப் போக்குடையதாக மாற்றமடைந்தது.
அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும் ஆதரவு வழங்கியது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில், 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த கால நீடிப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். தவி ர்ந்த ஏனைய கட்சிகளான தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் என்பன ஆதரவு வழங்கியிருந்தன.
இந்த நிலையில் அந்த நீடிப்புக்கு பின்னர் கூட பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. மக்கள் தன்னெழுச்சியாக நினைவு கூரலில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கம் அமைதி காத்திருக்கிறது.
இதைவிட முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டதா என்பது கேள்வியே? நல்லாட்சி அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து வரும் கூட்டமைப்பு தலைமை இலங்கை அரசிற்கு எதிரான சர்வதேச அழுத்தத்தை குறைப்பதற்கும், அரசின் செயற்பாடுகளுக்கும் கொடுத்து வரும் ஆதரவை வைத்து தமிழ் மக்களின் அவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க காத்திரமாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மையும் கூட. மாறாக தமக்கான பதவிகளையும், சலுகைகளையும் அது பெற்றிருக்கின்றது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரியான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசாங்கம் தமது அபிலாசைகளையும், அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது.
அரசுடன் இணக்க அரசியல் செய்யும் கூட்டமைப்பு இந்த விடயத்தில் காத்திரமாக செயற்படும் என்ற எதிர்பார்ப்பும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்தது.
ஆனாலும் இரு தரப்பினரதும் செயற்பாடுகளும் தமிழ் மக்கள் மத்தியில் விரக்தி நிலையை உருவாக்கியுள்ளது. இதனாலேயே தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக தமது காணிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், தமது பொருளாதார வளங்களைக் கொண்ட கடல் நிலங்களை விடுவிக்க கோரியும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மக்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சியான போராட்டங்கள் 10 மாதங்கள் கடந்தும் நீண்டு கொண்டிருக்கின்ற போதும் அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அது குறித்து கூட்டமைப்பு தலைமையும் போதிய அழுத்தம் கொடுத்ததாக தெரியவில்லை.
இந்தப் பின்னணியிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதில் இருந்து கூட்டமைப்பு தலைமை விலகத் தொடங்கியதும் மாற்றுத் தலைமைக்கான தேடல்களும், கருத்துக்களும் முன்வைக்கப் பட்டன.
ஆனால் அந்த மாற்றுத் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்காக அல்ல. மாறாக தமிழ் மக்களது உரிமைக்கான கோரிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு அமைப்பாகவே அது எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் மக்களது அபிலாசைகளை தமிழ் மக்கள் பேரவையும் முன்வைத்து ஒரு மக்கள் இயக்கமாக தன்னை காண்பித்தது.
புதிய இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் உள்ள நிலையில் தமிழரசுக் கட்சியும் அதனுடன் இணைந்த கூட்டுக்களும் அதனை ஆதரித்தன.
தமிழ் மக்கள் பேரவையும் கூட்டமைப்பின் பங்காளியாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியும், பேரவைக்குள் இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதனை எதிர்த்தன.
இந்த நிலையிலேயே இத்தகைய ஒரு அரசியலை முன்நகர்த்த கொள்கை ரீதியில் உடன்பட்டு செயற்படும் மாற்று அணி தேவை என உணரப்பட்டது.
கொள்கை ரீதியில் ஒன்று பட்டு செயற்படுகின்ற அனைத்து தரப்புக்களையும் இணைத்து அந்த அணி நகர வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வாறு நகரும் பட்சத்தில், அதற்கு வடக்கு முதலமைச்சர் உட்பட தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு வழங்கக் கூடிய சூழல் உருவாகியிருந்தது.
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொள்கை சார் முரண்பாடு காரணமாக வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அணியும், தற்போது கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். அணியும் இணைந்து ஒரு கூட்டு அமைக்கும் பட்சத்தில் தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர்கள், பேரவையில் உள்ள பொது அமைப்புக்கள் என பலவும் இணைந்து அது ஒரு கொள்கை சார் வலுவான கட்டமைப்பாகவும், தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை முன்நகர்த்தக் கூடிய ஒரு அமைப்பாகவும் உருவாகக் கூடிய நிலை இருந்தது.
மக்கள் இயக்கமாக தொழிற்படும் பேரவையின் ஆதரவு பெற்ற அரசியல் அமைப்பாக அது மாறக் கூடிய சூழல் உருவாகியிருந்தது. ஆனாலும் கொள்கை அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியாக வலுவான ஒரு அமைப்பு உருவாகுவதை கூட்டமைப்பு போன்று தென்னிலங்கையும் விரும்பியிருக்க வில்லை.
இதற்கும் அப்பால் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் சிலவும் விரும்பியிருக்கவில்லை. இதன் அழுத்தமே அத்தகையதொரு கொள்கை அடிப்படையிலான புதிய கூட்டை உருவாக்க முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில் தான் கஜேந்திரகுமார் அணிக்கும், சுரேஸ் பிரேமச்சந்திரன் அணிக்கும் இடையிலான சமரசம் முறிந்து இருவரும் தனித்தனி கூட்டுக்களை அமைத்துள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். ஈரோஸ், ஜனநாயகப் போராளிகளின் ஒரு பகுதியினர், ஜனநாயக தமிழரசுக் கட்சி என்பன அந்தக் கூட்டில் உள்ளதுடன் வேறு சில கட்சிகளும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு என்னும் பெயரில் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் இந்த கட்சிகளின் கொள்கைளும், தமிழ் மக்களது தீர்வுக்கான யோசனைகளும் ஒன்று தானா என்ற கேள்வி இயல்பாகவே மக்களிடத்தில் எழுந்துள்ளது.
மறுபுறத்தில், கஜேந்திரகுமார் அணி தனது தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தமது இணைக் கட்சியாகிய தமிழ் காங்கிரஸையும், தமிழர் சமவுரிமை இயக்கம் மற்றும் சில பொது அமைப்புக்களையும் இணைத்து தமிழ் தேசிய பேரவை என்னும் பெயரில் சைக்கிள் சின்னத்தில் தேர்தலை முன்னிட்டு மாற்று அணிக்கு போட்டியாக ஒரு கூட்டை அமைத்துள்ளார்.
அவர்கள் பேரவையின் கொள்கை பிரகடனத்தை தமது மூலமாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். கூட்டமைப்பை பொறுத்தவரை ரெலோ, புளொட் என்பன தமிழரசுக் கட்சியுடன் கொள்கை சார் முரண்பாடுகள் இன்றி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் முரண்பட்டு நிற்கின்றன.
இருப்பினும் அவை பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் தரப்பு, தமிழ் தேசியம் பேசும் தமிழ் தேசியப் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய பேரவை என்கின்ற மூன்று கூட்டுக்களை எதிர்கொள்ளப்போகின்றது.
இவற்றை விட அபிவிருத்தி நோக்கி ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என அந்த பட்டியல் நீளப் போகிறது. இந்த நிலையில் தமிழ் மக்கள் என்ன செய்யப்போகின்றார்கள்.
கொள்கைக்காகவும், தமது அரசியல் அபிலாசைகளை நகர்த்துவதற்காகவும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்காக வாக்களிக்கப் போகின்றார்களா, அல்லது தேர்தலுக்கான அதாவது அரசியல்வாதிகளின் இருப்புக்கான தேர்தல் கூட்டுக்களுக்கு வாக்களிக்கப் போகின்றார்களா…? அல்லது அபிவிருத்தியை மட்டும் வைத்து வாக்களிக்கப் போகிறார்களா…? என்ற கேள்விகள் எழுகின்றன.
தேர்தல் கூட்டுத்தான் தேவை எனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மாற்ற வேண்டிய தேவையும் இல்லை. ஆக, தமிழர் தரப்பு வாக்குவங்கி தேர்தல் கூட்டுக்களால் சிதறப்போகின்றது.
இதனை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள். அவர்களது வாக்கே இந்த கூட்டுக்களின் இருப்பையும், நகர்வையும் தீர்மானிக்கப் போகிறது. அதுவே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வை தீர்மானிக்கும்.
-ருத்திரன்-