அவுஸ்திரேலியாவில் தேவாலயங்கள், பாடசாலைகள், விளையாட்டுக் கழங்கள் போன்றவற்றில் சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென விசேட விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
2013ஆம் ஆண்டில் இருந்து பதிவாகியுள்ள இரண்டாயிரத்தி 500 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே குறித்த தகவல் தெரியவந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொடர்பு கொண்டு சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமை குறித்து முறையிட்டதாகவும் எண்ணாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் தம் மீது நடத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக நேரடியாக விபரித்துள்ளார்கள் என்றும் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனாலும் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இதைவிட கூடுதலாக இருக்கலாம் என்றும் ஆணைக்குழு அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் சிறுவர்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து, பாதுகாக்கக்கூடிய எந்வொரு ஏற்பாடுகளும் சரியான முறையில் செயற்படவில்லை என்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் விசாரணைக்குழு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன் காரணமாக பெற்றோர் பெரும் கவலையடைந்துள்ளதாகவும் விசாரணைக்குழு அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் 400 பரிந்துரைகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை சிறுவர்கள் மீது பாலியஸ் துஸ்பிரயோகம் இடம்பெற்றமை வெட்கத்துக்குரியது என அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் ரேன்புல் கூறியுள்ளார்.
இது ஒரு தேசிய துயரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு கடந்த ஐந்து வருடங்களில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.