காணி பிரச்சனைகளை தீர்ப்பதில் பாரிய நெருக்கடியான நிலைமைகள் தோன்றியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காணி பிணக்குகள் தொடபாக ஆராய்வாற்காக இன்றைய தினம் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மன்னார் மாவட்டத்திலிருந்து குறித்த கூட்டத்திற்கு வரவிருந்த பிரதேச செயலர்களை அரசாங்க அதிபர் தடுத்திருப்பதாக தெரிவித்த க.வி. விக்னேஸ்வரன் இது மிகுந்த வருத்தமளிக்கிறதெனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களமும், வன ஜீவராசிகள் திணைக்களமும் அபகரிப்பதனால் எழும் பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இன்றைய கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் க.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் பல பிரதேச செயலாளர்கள், வனவள திணைக்களத்தின் அதிகாரிகள், மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என க.வி. விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் இணைந்து செயற்படவேண்டும் என்பதற்கு தடையாகவே இது உள்ளதென தெரிவித்துள்ள க.வி. விக்னேஸ்வரன் எனவே இந்த பிரச்சினை தொடர்பாக ஆராயவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்காக முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.