நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை கிழக்கில் பிரதேச சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியை உள்ளிட்ட இருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை கிழக்கு கருப்பையா வீதியைச் சீரமைக்க நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய குறித்த வீதியைச் சீரமைப்பதற்கான பணிகள் நல்லூர் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பிரதேச சபை
ஊழியர்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த இருவர் தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் செயலாளரால் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பிரதேச சபை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவரைகயும் கைது செய்தனர்.
‘கருப்பையா வீதி 338 மீற்றர் நீளத்தையும் 12 மீற்றர் அகலத்தையும் கொண்டது என நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.
எனினும் கருப்பையா வீதி 4 மீற்றர் அகலத்தை கொண்டது எனவும் மிகுதிப்பகுதி தனியாருக்கு சொந்தமானது என குறித்த இருவரும் தெரிவித்துள்ளதை அடுத்தே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.