இலங்கைக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையும், 2-ஆவது ஆட்டத்தில் 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றிபெற்றிருந்தன
இதையடுத்து 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நாணயச்சுழற்றியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
27.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தரங்கா, சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
சமரவிக்ரமாவும் 42 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அப்போதைய சூழலில் இலங்கை 300 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதன்பின்னர் வந்த அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்திய அணி சார்பாக சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பாண்டியா 2, பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 216 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 32.1 ஒவரில் 2 விக்கெட்டுக்கு 219 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றி கிண்ணத்தை வென்றது.
தொடர்ந்து 8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.