இங்கிலாந்துக்கு எதிரான ஆசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் 3-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா.
கடந்த சீசனில் இங்கிலாந்து இந்தத் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியா மீண்டு வந்துள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த 3-ஆவது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் டேவிட் மலான் அதிகபட்சமாக 140 ரன்களும், அடுத்தபடியாக ஜானி பேர்ஸ்டோவ் 119 ரன்களும் எடுத்தனர்.
ஸ்டோன்மேன் அரைசதம் கடக்க, எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவ்வாறாக இங்கிலாந்து 115.1 ஓவர்களில் 403 ரன்களுக்கு முதல் இன்னிங்ûஸ முடித்துக் கொண்டது.
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹேஸில்வுட் 3, பேட் கம்மின்ஸ் 2, நாதன் லயன் ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா அபாரமாக ஆடி 179.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 239 ரன்கள் விளாசினார். அடுத்தபடியாக மிட்செல் மார்ஷ் 181 ரன்கள் அடிக்க, உஸ்மான் கவாஜா அரைசதம் எட்டினார்.
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆன்டர்சன் 4, ஓவர்டன் 2, வோக்ஸ் மற்றும் மொயீன் அலி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இங்கிலாந்து ஞாயிற்றுக்கிழமை முடிவில் 38.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை டேவிட் மலான் 28, ஜானி பேர்ஸ்டோவ் 14 ரன்களுடன் தொடங்கினர். இந்த ஆட்டம் மழையால் சற்று தாமதமானது.
பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் பேர்ஸ்டோவ் அதே ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மொயீன் அலி 11 ரன்களில் நடையைக் கட்டினார்.
மறுமுனையில் தகுந்த பார்ட்னர்சிப் கிடைக்காத டேவிட் மலான் அரைசதம் கடந்து 54 ரன்களில் வீழ்ந்தார்.
ஓவர்டன் 12 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஸ்டூவர்ட் பிராட் டக் அவுட் ஆனார். இவ்வாறாக, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட 41 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹேஸில்வுட் அதிகபட்சமாக 5, பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2, மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் எடுத்தனர்.
ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.