மன்மோகன் சிங் மீது அவதூறு கூறியதாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் கோசம் எழுப்பியதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை மக்களவை கூடியதும் கேள்வி நேரத்திற்கு உரிய கேள்விகள் வாசிக்கப்பட்டன.
ஆனால், குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், சில எம்.பி.க்கள் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச முயற்சித்தனர்.
இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் எழுந்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் அமைதி காத்து, கேள்வி நேரத்தை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், அவர்கள் அமைதியாகாததால், அவையை நன்பகல் வரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார். இதே விவகாரத்தால் நேற்று அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.