கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒக்கி’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து, ஆறுதல் கூறவும், பிரதமர் நரேந்திர மோடி, இன்று பகல், 2:20 மணியளவில், கன்னியாகுமரி வந்தார்.
திருவனந்தபுரத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் குமரி வந்த அவரை, கவர்னர், பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், விவசாயிகள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் பிரதமர், அவர்களின் குறைகளை கேட்டார்.
இந்த கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கமளித்தார்.
முன்னதாக பிரதமர் மோடி ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட லட்சத்தீவுகளை ஆய்வு செய்தார்.
அங்கு ஆய்வு முடிந்த பின், விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்.