இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் இன்னமும் அகதி முகாம்களில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் சிலரின் புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சொந்த நாட்டில் வாழ முடியாத சூழ்நிலையில், ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டவர்கள் மீண்டும் திருப்பியனுப்படும் இக்கட்டுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இது போன்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமைகள் தொடர்பாக பல்வேறு சட்டச் சிக்கல்கள், விளக்கமின்மைகள் அதிகளவில் காணப்படுகின்றன.
தவிர, சில நாடுகள் புகலிடக் கோரிக்கையாளர்களை தமது நாட்டிற்குள் ஏற்பது குறித்து இறுக்கமான கொள்கைகளை கொண்டுவருகின்றன.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் தற்போதைய கொள்கைகளை ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் பேர்ன் மாகாணத்தில் எதிர்வரும் ஜனவரி 30 மற்றும் 31 திகதிகளில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கருத்தரங்கை ஐ.நா. அகதிகள் முகமை மற்றும் சுவிஸ் அகதிகள் முகமை ஆகியவை இணைந்து நடத்த உள்ளன.
இதில் தொடர்புடைய நிபுணர்கள், அரசியல், சமூக ஆர்வலர்கள், நிவாரண அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகம் உள்ளிட்டவைகளில் இருந்து பங்கேற்பாளர்களை எதிர்பார்க்கின்றனர்.
அகதிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் பொருட்டே இந்த கருத்தரங்கை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல் நெருக்கடிகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் மன்றம் உறுதி அளித்துள்ளது.
மட்டுமின்றி அகதிகள் குடியேற்றத்தாலும், புலம்பெயர்தல் காரணமாக பாதிக்கப்படும் நாடுகளுக்கு தங்கள் ஆதரவையும் அறிவித்துள்ளனர்.
மேலும், அகதிகள் பாதுகாப்பிற்காக 2016 ஆம் ஆண்டு எந்தவகையான உறுதியான நடவடிக்கைகள எடுக்கப்பட்டுள்ளது? தேசிய மற்றும் சர்வதேச தலத்தில் சுவிஸ் அரசு எந்தவகையான பங்களிப்பை ஆற்றியுள்ளது?
சாதாரண குடிமக்கள் இது தொடர்பில் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? உள்ளிட்ட விடயங்களை குறித்த கருத்தரங்கில் விவாதிக்க உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்தக் கருத்தரங்கின் மூலமாக சுவிஸ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நல்ல முடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அவதிப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களின் இந்தப் பிரச்சினை குறித்து பெரும் சிக்கல்களை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கருத்தரங்கின் முடிவில் தமக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க வேண்டும், என்றும் தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கருத்தரங்கம் அவர்களின் ஏக்கத்திற்கு விடை கொடுக்குமா என்பது வரும் தை மாதத்தில் நடக்க இருக்கும் கருத்தரங்கம் முடிவு செய்யுமா?