மூன்று முறை சுவிஸில் நிரந்திர புகலிடம் கோரியும் மறுக்கப்பட்ட ஈரான் அகதியை நாடுகடத்தலாம் என மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரானை சேர்ந்த 35 வயதான அகதி கடந்த 2009-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு தஞ்சம் தேடி வந்தார்.
அப்போதிலிருந்து மூன்று முறை அவர் சுவிஸில் நிரந்திர புகலிடம் கோரி விண்ணப்பித்தும் விண்ணப்பமானது நிராகரிக்கப்பட்டது.
ஈரானில் இஸ்லாமிராக பிறந்த அகதி பின்னர் கிறிஸ்துவராக மதம் மாறியுள்ளார். இந்நிலையில், ஈரானில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, அதற்கு எதிராக குறித்த அகதி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஈரானிலிருந்து தப்பி சுவிஸுக்கு வந்துள்ளார். அவர் மீது நம்பகத்தன்மை குறைவாக இருந்ததால் புகலிட விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.
இரண்டாவது முறையாகவும் அவர் புகலிடத்துக்கு விண்ணப்பித்தார்.
அதில், தான் இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறியதால் ஈரானுக்கு திரும்பினால் தனக்கு ஆபத்து இருக்கும் என கூறினார்.
ஆனால், இதை ஏற்காத சுவிஸ் அதிகாரிகள் மீண்டும் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
ஆனால் இது தொடர்பான வழக்கு மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இருந்தது.
இந்நிலையில், அகதியை நாடு கடத்தலாம் எனவும் அவர் ஈரானுக்கு திரும்பினால் எந்தவொரு ஆபத்தும் இருக்காது எனவும் ஐரோப்பிய நீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது.