ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகளை முதலிலேயே வெளியிடாமல் இவ்வளவு நாள் மறைத்தது ஏன்? என்று திருநாவுக்கரசர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சி வெளியிடப்பட்டிருப்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
இன்று வெளியிட்டு இருக்கும் வீடியோ காட்சிகள் இவ்வளவு நாள் எங்கிருந்தது, முதலிலேயே வெளியிடாமல் இவ்வளவு நாள் மறைத்தது ஏன்?
தாக்கப்பட்டு இறந்து போனார் என்றெல்லாம் வதந்தி பரவியபோது ஏன் வெளியிடவில்லை.
சினிமா துறையில் இருந்தவர், முதல்-அமைச்சராக இருந்தவர் சிகிச்சை பெற்ற போது படம் வெளியாக வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.
உயிரோடு இருந்த வரை அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ளலாம். அதன் பிறகு அந்த கவலை இல்லையே. அப்படி இருந்தும் ஏன் வெளியிடவில்லை.
ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார். பழச்சாறு குடித்தார் என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
அவர் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்படும்போது எப்படி இருந்தார்? என்ற சர்ச்சைகள் எழுந்தபோது வெளியிட்டு இருக்கலாம்.
ஒரு மாநிலத்தின் முதல்- அமைச்சர் ஆஸ்பத்திரியில் எப்படி இருக்கிறார் என்று தெரியாமல் பதட்டமான சூழ்நிலை நிலவியபோது காவல் துறை உயர் அதிகாரி, தலைமைச் செயலாளர் எல்லோரும் சேர்ந்து இது தான் நிலைமை என்ற உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாம்.
இப்போதும் முழுமையாக வெளியிட ஏன் தயக்கம்? பகுதி பகுதியாக சஸ்பென்ஸ் வைத்து வெளியிட சினிமா கதையா?
மொத்தமாக வெளியிடட்டும். மக்கள் புரிந்து கொள்ளட்டும். விசாரணை ஆணையம் விசாரித்து தெளிவுபடுத்தட்டும்.
இந்த வீடியோ பதிவு ஆர்.கே.நகர் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் இவ்வாறு அவர் கூறினார்.