வெஸ்ட் இண்டீசுடனான முதல் ஒருநாள் போட்டியில் டக் பிரேஸ்வெல்லின் சிறப்பான பந்துவீச்சில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வான்கேராயில் இன்று நடைபெற்றது.
இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு போட்டி தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயிலும், லெவிசும் களமிறங்கினர். கெயில் 22 ரன்களில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து இறங்கியவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. தொடக்க ஆட்டக்காரர் லெவிஸ் 100 பந்துகளில் 1 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்தார்.
ரோவ்மென் பாவல் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 52 ரன்கள் குவித்தார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் டக் பிரேஸ்வெல் 4 விக்கெட்டும், டாட் ஆஸ்லே 3 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வொர்க்கரும், முன்ரோவும் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து 108 ரன்கள் சேர்த்தனர். முன்ரோ சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 8 பவுண்டரி அடித்து 49 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து வொர்க்கர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் ஓரளவு விளையாட அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
இறுதியில் நியூசிலாந்து அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 49 ரன்களுடனும், டாட் ஆஸ்லே 15 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர், நர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டும், வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.