அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சாலையை கடக்க முற்பட்ட பாதசாரிகள் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னின் பிளிண்டர்ஸ் சாலை பகுதியில் இன்று காலை பொதுமக்கள் சாலையை கடக்க நின்றிருந்தனர்.
இதன்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில், பாதசாரிகள் சிலர் தூக்கி வீசப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், கார் மோதியதில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காரை செலுத்தி வந்த சாரதி உள்ளிட்ட இருவரையும் கைதுசெய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் இதுபோல கூட்டமாக மக்கள் இருக்கும் பகுதிகளில் தீவிரவாதிகள் வாகனத்தை மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதால், இது அதுபோன்ற தாக்குதலாக இருக்குமோ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.