போதைப்பொருள் மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் தேயிலை கைத்தொழில் துறையில் உலக பிரசித்தி பெற்றிருந்த இலங்கை இன்று போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக உலக பிரசித்தி பெற்றுக்கொண்டுள்ளது.
தற்பொழுது இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் போதைப்பொருள் விநியோகம் செய்யும் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது.
சதொச நிறுவனத்திற்கு சொந்தமான லொறிகளிலும் போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுகின்றது. கொள்கலன்களில், லொறிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றன.
பிடிக்கப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நேர்கின்றது என்பது தெரியவில்லை.
எனினும், போதைப்பொருட்களை இல்லாதொழிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் அரசாங்கத்திற்கு எவ்வித திட்டங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்