அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் உள்ள மக்கள், சுனாமி பீதி காரணமாக, நேற்று(22.12.2017) நள்ளிரவு வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஒடியதாக அந்தக் கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் சுனாமி பீதி காரணமாக, மருதமுனை,கல்முனை அக்கரைப்பற்று, தம்பட்டை திருக்கோவில், கோமாரி, பொத்துவில் போன்ற கரையோரப் பிரதேசங்களில் வாழும் சில குடும்பங்கள், அச்சம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று மீண்டும் காலை வேளையில் தங்களது வீடுகளுக்கு திரும்பியதாக சம்மந்தப்பட்ட கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில், கடல் அலைகள் கரைகளை நோக்கி வழமையைவிட சற்று முன்நோக்கி வந்திருந்ததாகவும் இது கடல் வழமையாக ஊவாப்போடுதல் போன்ற சம்பவமாக இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும், கரையோர மக்கள் தொடர்ந்து இரவு வேளைகளில் அச்சத்துடன் தூங்க வேண்டிய நிலைமைகள் இருப்பதாகவும் சம்மந்தப்பட்ட மக்கள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.