இன்றைய நடைமுறை வாழ்க்கையில் மனஅழுத்தம் இல்லாத ஆளே இருக்க முடியாது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருக்கிற வாழ்க்கை முறை, போதிய ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்ளாமை போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகிறது.
நம்முடைய முன்னோர்களின் வாக்குப்படி உணவே மருந்து என்பதை மனதில் வைத்துக் கொண்டாலே போதும். நம்முடைய எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிட முடியும். அதைவிட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் மருத்துவரை பார்த்து மருந்துகள் சாப்பிடுவது மட்டுமே நம்முடைய தீர்வாக இருக்காது.
நம்முடைய வாழ்க்கை முறையிலும் மாறுதல்கள் கொண்டு வர வேண்டும். அதில் முதன்மையான விஷயங்களில் ஒன்று.
அப்படி என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொண்டால் மன அழுத்தத்தைத் தவிர்க்க முடியும்?
வால்நட் அதிகஅளவு ஒமேகா 3 நிறைந்துள்ளது. இது மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தி சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ளும். இதனால் மனஅழுத்தம் குறைய வாய்ப்பிருக்கிறது.
மன அழுத்தத்தைக் குறைப்பதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளியில் உள்ள ஃபோலிக் அமிலம் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகிறது.
வாழைப்பழத்தில் உள்ள ட்ரைடோபன் என்னும் வேதிப்பொருள் நம்முடைய மனநிலையை இலவாக வைத்திருக்க உதவுகிறது. தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. வாழைப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம், மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை உள்ளதால் இவை மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றுகிறது.
செர்ரி சீசன்களில் மட்டும் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்று. இதிலுள்ள ஆண்டி- ஆக்சிடண்டுகள் உங்கள் மனநிலையை மிகக் கூலாக வைத்திருக்கும்.
ஆப்பிளில் உயர் ஆண்டி- ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கின்றன. இது ஆக்சிடேசன் சிதைவுகள் உண்டாகாமல் நம்மைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள நர்ர்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
தயிரில் உள்ள அமினோ ஆசிட் மூளையை சுறுசுறுப்படையச் செய்து, மன இறுக்கத்தைக் குறைக்கிறது.
அதேபோல் பூண்டு, அவகாடோ, எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றிலும் ஆண்டி- ஆக்சிடண்டுகள் மிக அதிக அளவில் இருப்பதால் இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் மன அழுத்தங்கள் குறைக்கப்படும்.