பிகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோருக்கு எதிரான கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், கால்நடைத் தீவனம் வாங்குவதாகக் கூறி, ரூ.89.27 லட்சம் வரை மோசடி செய்ததாக, லாலு பிரசாத், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, முன்னாள் எம்.பி. ஆர்.கே.ராணா, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 22 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் முன்னிலையில் ஆஜராவதற்காக, லாலு பிரசாத் தனது மகன் தேஜஸ்வி யாதவுடன் நீதிமன்றம் வந்தடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, 34 பேருக்கு எதிராக கடந்த 1997-ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில், 11 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் சிபிஐ தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.
இந்நிலையில், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் இருந்து பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவை உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு.
இதில் இருந்து பிகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு தொடர்பான தண்டனை விவரங்களை வருகிற ஜனவரி 3-ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி சிவ்பால் சிங் தெரிவித்துள்ளார்.