பிரான்சில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும் அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு பாரிசின் புறநகர்ப் பகுதியில் உள்ள நந்தியாரில் நேற்றையதினம் நடைபெற்றது.
பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை நந்தியார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு சாந்திக்குமார் ஏற்றி வைத்தார்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை
லெப் .கேணல் அன்புக்குமரன் மற்றும் வீரவேங்கை தங்கமணி ஆகியோரின் சகோதரர்கள் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கடற்கரும்புலி சுதாஜியின் தாயார் ஏற்றி வைத்துடன், மலர் வணக்கம் செலுத்தினார்.
அதன் பின்னர் அக வணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து நந்தியார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சாந்திக்குமார் பாலா அண்ணா பற்றிய உரையையும், மாணவிகளின் நடனமும், கவிதையும்
இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையில் தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் இழப்பு எமது இனத்திற்கு பேரிழப்பு என்றும், புலம்பெயர் புத்திஜீவிகள் இனிமேலாவது எமது மக்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.