ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு ஏற்பட்ட தோல்வி என்பதைவிட, தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்த இமாலயத் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட ‘தாராளமானதும் ஏராளமானதுமான தர்மம்’ வென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாதாளம் வரை பாய்ந்த பணத்தையும் தாண்டி, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மருதுகணேசுக்கு 24,651 பேர் வாக்களித்திருப்பது, உயிரோட்டமுள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீது, இன்றைய சூழலிலும் அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
6ஆயிரம், மற்றும் 10ஆயிரம் போன்ற பண மழையிலிருந்து ஜனநாயகத்தை போராடிப் பாதுகாத்திடவே திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலைச் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹவாலா பாணியில் வாக்குப் பதிவு தினத்தன்றே வாக்காளர்களுக்குப் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டதை தேர்தல் ஆணையம், கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்ததாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது திமுக வேட்பாளருக்கு ஏற்பட்ட தோல்வி என்பதை விட, தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ள இமாலயத் தோல்வி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்றும் குறிபிட்டுள்ள ஸ்டாலின்,
இப்படிப்பட்ட நிலைமை, மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற உதவுமா என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.