மியான்மார் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லீம் மக்களுக்கெதிராக இடம்பெற்று வருகின்ற கொடுமைகள் மனிதாபிமானத்திற்கு எதிரானவை என கனடா நாட்டின் சிறப்பு தூதுவரான பொப்றே கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த செயற்பாடுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதுள்ளதாகவும் பொப்றே சுட்டிக்காட்டியுள்ளார்.
மியான்மார் நாட்டின் ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்காக கனடாவால் நியமிக்கப்பட்ட சிறப்புத் தூதுவரான பொப்றே வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தள்ளார்.
அத்துடன் மியான்மாரின் பாதுகாப்பு படையினர் மற்றும் குறித்த மக்களுக்கு எதிரானவர்களால்;, மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளால், ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து அயல்நாடான பங்களாதேசிற்கு தப்பிச் சென்றுள்ளதையும் பொப்றே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் பங்களாதேசில் உள்ள அகதி முகாம்களில் வருந்தத்தக்க முறையில், அளவுக்க அதிகமான மக்களால் நிரம்பி வழிவதாகவும், இதனால் சுகாதார உயிர் அச்சுறுத்தல்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பெண்கள் எதிர்நோக்கிய, எதிர்நோக்கிவரும் பெரும் துயரங்களையும், பாலியல் வன்முறைகளையும் நிழற்பட, மற்றும் ஒளிப்பதிவு ஆதாரங்களுடன் கனடா நாட்டின் சிறப்பு தூதுவரான பொப்றே முன்வைத்துள்ளார்